புத்ராஜெயா, நவ.21-
ஆப்கானிஸ்தான் கல்விப் பேராளர் குழுவினர் அண்மையில் மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள கல்வி அலுவல் பயணம் தொடர்பில் சர்ச்சை செய்யப்பட்டு வரும் வேளையில் மலேசியாவை, கல்விக்கொள்கைக்கான சிறந்த குறியீடாக கொள்ள ஆப்கானிஸ்தான் விருப்பம் கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கல்விப் பேராளர்கள் குழுவினரின் இந்த வருகையானது, வெளியுறவு அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டதாகும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் அவர்களின் மலேசிய வருகைக்கு முன்னதாக அனைத்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டப் பின்னரே அவர்களின் வருகை அனுமதிக்கப்பட்டதாக அது விளக்கம் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான மலேசியாவின் வெளியுறவுக்கொள்கை அணுகுமுறை அடிப்படையில் கல்வி மட்டுமின்றி சுகாதாரம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் திறன் மேம்பாடு பயிற்சி முதலியவற்றையும் அந்நாட்டிற்கு வழங்க மலேசியா தயாராக உள்ளது.
மலேசிய கல்வி முறையை முன்னுதாரணமாக கொண்டு, ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி முறை உட்பட சிறந்த கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு மலேசியா கல்வி முறையின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்கான ஒரு நல்லிணக்க அடிப்படையில் ஆப்கானிஸ்தான் கல்விக்குழுவினரின் இந்த வருகை அமைந்துள்ளதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தன்னிலை விளக்கத்தை தந்துள்ளது.