சித்தியவான், நவ. 21-
நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான பேரா, ஆயர் தாவார் எழுத்தாளர் கோ. முனியாண்டி இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 76.
மறைந்த கோ. முனியாண்டி, சிறுகதை, கட்டுரை, நாவல், புதுக்கவிதை என மலேசிய தமிழ் இலக்கிய உலகில் கடந்த 60 ஆண்டு காலமாக பல்வேறு பரிணாமங்களில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர்.
கடந்த 1948 ஆம் ஆண்டு லுமுட்டில் கோவிந்தசாமி-அன்னம்மாள் இணையருக்குப் பதினொன்று பிள்ளைகளில் முதல் மகனாக கோ. முனியாண்டி பிறந்தார். இவர் பேராக், சித்தயவான், சப்போக் தோட்டத்தைப் பின்னணியாகக் கொண்டவர்.
கோ. முனியாண்டி முதலாம் ஆண்டு கல்வியைப் பேராக்கில் உள்ள ஆயார் தாவார் மெதடிஸ் ஆங்கிலப் பள்ளியில் தொடங்கினார். பின்னர் தோட்டத் துண்டாடல் காரணமாக மூன்றாம் ஆண்டு கல்வியைப் புருவாஸ் தோட்டத்திலும், நான்காம் ஆண்டு கல்வி முதல் ஆறாம் ஆண்டு வரை பேராக் ஆயர் தாவர் செயின் திரேசா தமிழ்ப்பள்ளியிலும் கற்றார். குடும்ப வறுமையின் காரணமாக 1961 ஆம் ஆண்டு தொடக்கக் கல்வியோடு தமது கல்வியை முடித்துக் கொண்டார்.
1960-இல் தனது 15-ஆவது வயதில் வானொலியில் இடம்பெற்ற ‘இளைஞர் உலகம்’ எனும் பகுதிக்கு எழுத ஆரம்பித்தது மூலம், கோ. முனியாண்டியின் எழுத்துப் பிரவேசம் தொடங்கியது.
1977 ஆம் ஆண்டு முதல் இவர் படைப்புகள், தினசரி ஞாயிறு பதிப்பு, வார, மாத இதழ்களில் வரத்துவங்கின. குறிப்பாக, வானம்பாடி நாளிதழில் அவரது படைப்புகள் அதிகமாக வெளியாயின.
வானம்பாடி வார இதழுக்கு தலைமையேற்று இருந்த மறைந்த ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்னி சுகுமார், கெடா எழுத்தாளர் எம்.ஏ. இளைஞ்செல்வன் ஆகியோருடன் இணைந்து மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களில் கோ. முனியாண்டியும் ஒருவர் ஆவார்.
1988 ஆம்-ம் ஆண்டு ஆண்டு 2-ஆவது புதுக்கவிதை மாநாடு மலேசியாவில் நடைபெறுவதற்கு பெரும் துணை நின்றவர் கோ. முனியாண்டி ஆவார். இம்மாநாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரபல கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான மு.மேத்தா தலைமை தாங்கினார்.
தமிழ் நாளிதழ்களிலும் சித்தியவான் நிருபராக கோ. முனியாண்டி பணியாற்றியுள்ளா்.
இராமனின் நிறங்கள் மற்றும் கோ. முனியாண்டியின் சிறுகதை தொகுப்பு எனும் இரண்டு நூல்களை மலேசிய இலக்கியத்துறைக்கு கோ. முனியாண்டி வரவு வைத்துள்ளார்.
மலேசிய இலக்கிய சிந்தனை புதுக்கவிதைக்காக 1979 ஆம் ஆண்டில் முதல் பரிசைப்பெற்ற கோ. முனியாண்டி, மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஆதி.குமணன் விருதை 2013 ஆம் ஆண்டில் பெற்று சிறப்பிக்கப்பட்டார்.
கோ.முனியாண்டியின் நல்லுடன் வரும் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.