கோலாலம்பூர், நவ. 30-
சிறு சிறு குப்பக்கூளங்களை ஆங்காங்கு வீசுகின்றவர்களுக்கு தண்டனையாக சமூக சேவையில் ஈடுபடுத்தும் தண்டனை முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்ட்ததில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நடப்பு சட்டம் திருத்தப்படுவது மூலம் குற்றம் இழைத்தவர்கள், தங்களுக்கான தண்டனையை சமூக சேவையில் ஈடுபடுத்துவது வாயிலாக அனுபவிக்க வேண்டும் என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

நடப்பில் உள்ள 2007 ஆம் ஆண்டு திடக்கழிவு சட்டம், பொது தூய்மை நிர்வகிப்பு சட்டம், 1974 ஆம் ஆண்டு சாலை, வடிக்கால் மற்றும் கட்டட சட்டம் மற்றும் 1976 ஆம் ஆண்டு ஊராட்சித்துறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது மூலம் சமூக சேவைக்கான தண்டனையை, ஒரு புதிய விதிமுறையாக சேர்த்துக்கொள்ள முடியும் என்று அமைச்சர் ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டிற்கான அந்தஸ்தை பெறுவதற்கு மலேசியா பீடுநடைப்போட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் நினைத்த இடத்தில் குப்பைக்கூளங்களை தூக்கி எறியலாம் என்ற மனப்பான்மை மக்களிடையே தொடர்ந்து மேலோங்கி வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.
கோலாலம்பூரில் நேற்றிரவு நடைபெற்ற வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் 2024 ஆம் ஆண்டு சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதளிப்பு விழாவில் அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை தெரிவித்தார்.

தற்போது ஊராட்சி மன்றங்களினால் அமல்படுத்தப்பட்டு வருகின்ற சட்டவிதி 133 மற்றும் 171 ஆகியவை சிறு சிறு குப்பைக்கூளங்களை வீசுகின்றவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்தும் தண்டனை முறையை கொண்டிருக்கவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே ஊராட்சி மன்றங்களின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆக்கமூட்டும் கருத்துக்களை வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களை கெளரவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சின் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.