கோலாலம்பூர், டிச.2-
நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஆகக்கடைசியான நேற்று மாலையில் கிளந்தான், மாச்சாங்கில் கால்நடைகளை பார்வையிடுவதற்கு சென்ற இரண்டு முதியவர்கள் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் நாடு தழுவிய நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 24 பேராக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று மாலை 4 மணியளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 896 பேரா இருந்தது என்று வெள்ள பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
பேராவில் லாருட் மாத்தாங், செலாமா, ஹிலிர் பேராக், கிந்தா மற்றும் கம்பார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், மலாக்கா ஆகிய மாநிலங்களில் நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த வருகிறது. கெடா, நெகிரி செம்பிலான் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.