புத்ராஜெயா, டிச.2-
நாடு முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி தனியார் துறையினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், எத்தகைய துயரத்தையும், சிரமத்தையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை தனியார் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் நேரடியாக பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியும் என்று அவை சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அல்லது பொருள் வடிவில் தனியார் நிறுவனங்கள் உதவி வழங்கலாம் என்று பிரதமர் பரிந்துரை செய்தார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளர்களுடன் மாதாந்திர பேரணிக்கு தலைமையேற்று உரையாற்றிகையில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
சில அரசாங்க ஏஜென்சிகளும் பாதுகாப்பு படையினரும், அரசு சார்பற்ற இயக்கங்களும், தனி நபர்களும் இன , சமய பாகுபாடுயின்றி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதை டத்தோஸ்ரீ அன்வார் தமது ஊரையில் பாராட்டினார்.