கோலாலம்பூர், டிச. 18-
18 ஆண்டுகளுக்கு முன்பு கியூபா, குவாண்டானாமோ விரிகுடா தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மலேசியர்களை ஒப்படைப்பற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் கடும் தண்டனைக்குரிய அந்த தடுப்பு மகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு மலேசியர்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தோனேசியா, பாலி குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர்கள் உட்பட 202 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்ததற்காக இரண்டு மலேசியர்களுக்கு குவாண்டனாமோ விரிகுடாவில் 20 முதல் 25 ஆண்டுகள் வரையில் கடும் தண்டனை விதிக்க
அமெரிக்கா இராணுவ நடுவர் மன்றம் தீர்ப்பளித்து இருந்தது. முகமட் நஸிர் லியோப் மற்றும் முகமட் பாரிக் அமின் ஆகியோரே அந்த இரண்டு மலேசியர்கள் ஆவர்.