டிச. 18-
மலேசியாவில் உள்ள காய்கறி விலை, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, அடுத்த மார்ச் மாதத்தில் நிலையாக இருக்கும் என்று வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சர் Muhammad sabu கூறினார். தற்போதைய நிலையற்ற காலநிலை காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
இப்பிரச்சனை அடுத்த மார்ச் மாதத்தில் தீர்க்கப்படும் என்று தமது தரப்பு எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் காய்கறி விநியோகம் போதுமானதாக இருப்பதை FAMA உறுதி செய்யும் என்றார் அவர். முன்னதாக, இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் மாநிலத்தில் 10,628 விவசாயிகளுக்கு 6.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டாம் கட்ட சிறப்பு நிதி உதவியை முகம்மட் சாபு வழங்கினார்.
கடந்த மாதம் கிளாந்தானில் நேர்ந்த வெள்ளத்தால் விவசாயத் துறையில் ஏற்பட்ட முதற்கட்ட இழப்பு சுமார் 33.2 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 4,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சோடு அதன் கீழ் உள்ள கிளைத் துறைகளும், அமைப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குறிப்பிட்ட குழுக்களுக்கும் உதவுவதற்கு எப்போதும் தயாராக உள்ளன என முகம்மட் சாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.