கோலாலம்பூர், டிச. 26-
கசகஸ்தான், அக்தாவ் அனைத்துலக விமான நிலையத்தின் அருகில் அஜர்பஜியான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான முன்னாள் சோவியத் குடியரசின் கசகஸ்தான் நாட்டில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்த வேளையில் 29 பேர் உயிர்ப்பிழைத்து இருப்பதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளும் வேளையில் உயிர் பிழைத்தவர்கள், விரைவில் பூர்ண குணமடைய வேண்டும் என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை, அஜர்பைஜான் தலைநகர் பாக்குவிலிருந்து ரஷ்யாவின் குரோஸ்னி நகரை நோக்கி 67 பேருடன் சென்ற எம்ராய்ர் 190 ரகத்திலான அஜர்பஜியான் ஏர்லைன்ஸ் விமானம், பனிமூட்டம் காரணமாக அது பாதை மாறி தரையிறங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், அந்த விமானம் , தரையிறங்குவதற்கான கியர் டயர்கள் கீழே அதிவேகமாக இறக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைப்போல தோன்றிய சில நொடிகளில், விமானம் வெடித்து ஒரு பெரிய தீப்பிழம்பு உண்டானது.
ரஷ்ய செய்தி ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.