ஜன. 8-
GMT எனப்படும் உலகளாவிய குறைந்தபட்ச வரி விதிப்பதில் ஒருமித்த கருத்தை ஆசியான் நாடுகள் எட்ட வேண்டும் என்று முதலீடு, வர்த்தகம், தொழில் துறை துணை அமைச்சர் Liew Chin Tong வலியுறுத்தியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருக்க மானியங்களை நாடுவது கண்டிக்கத்தக்கது என்றும், மக்களின் நலனுக்காக வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசியான் நாடுகள் ஊதியக் குறைப்பு மற்றும் வரிச் சலுகை போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கடந்த காலத்தில், ஆசியான் நாடுகள் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட தொழில் மாதிரியைப் பின்பற்றி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவான உற்பத்தி மையங்களாக மாற ஊதியத்தைக் குறைத்தன. மேலும் வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டன. இனிமேல், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆசியான் நாடுகள் தங்களை போட்டியாளர்களாகக் கருதாமல், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்று லியூ கூறினார். ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், ஆசியான் முழுவதும் இதுபோன்ற ஒத்துழைப்புகள் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.