ஜன. 8-
நெல் கொள்முதல் விலையைக் குறைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது PeSAWAH எனப்படும் மலேசிய நெல் விவசாயிகள் சங்கம். தற்போதைய விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,500 ரிங்கிட் முதல் 1,800 ரிங்கிட் வரை இருக்க, அதனை 1,300 ரிங்கிட் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு நியாயமற்றது என்றும், உற்பத்தி செலவுகளை பிரதிபலிக்கவில்லை என்றும் PeSAWAH தலைவர் Abdul Rashid Yob கூறியுள்ளார்.
நெல் விதை, உழவு, அறுவடை, நில வாடகை, இரசாயன உரங்கள் பராமரிப்புக் கூலி போன்ற பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளன. டீசல் மானியம் இரத்து செய்யப்பட்டதால் விவசாயிகளின் சுமை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, தற்போதைய குறைந்தபட்ச விலை பொருத்தமற்றது என்று Abdul Rashid Yob வாதிட்டார்.
அரிசி கட்டுப்பாட்டு விலையை உயர்த்த வேண்டும் என்றும், நெல் விலை நிர்ணயப் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் PeSAWAH அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக Abdul Rashid குறிப்பிட்டார். செலவுகளைக் குறைக்காமல் விலையைக் குறைப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.