ஜன.10-
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் வழங்குவதற்கான எந்தவொரு கூடுதல் உத்தரவும் இஸ்தானா நெகாராவிலிருந்து பெறப்படவில்லை என்று பிரதமர் அலுவலக சட்ட விவகாரப் பிரிவு உறுதிபடத் தெரிவித்துள்ளது. கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் செயலகமாக செயல்படும் அப்பிரிவு, தங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இதுபோன்ற எந்த ஆவணமும் இல்லை என்று கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு அறிக்கையும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளது.
மன்னிப்பு வாரியம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்றும், வாரிய உறுப்பினர்களும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அவற்றை அணுக முடியும் என்றும் தெரிவித்துள்ளது. நஜிப்பின் SRC வழக்கில் அவரது சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் குறைக்கப்பட்டதை அப்பிரிவு நினைவுபடுத்தியது. தற்போது அவர் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். வீட்டுக்காவல் உத்தரவை அமல்படுத்த கோரி நஜிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பிரதமர் அலுவலக சட்ட விவகாரப் பிரிவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.