தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற தேசிய நிலையிலான Vanakam MADANI பொங்கல் விழாவில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் Dato’ Sri Ramanan Ramakrishnan கலந்துகொண்டு சிறப்பித்தார். சுங்கை பூலோ, TAMAN INDUSTRIயில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ மகா கருமாரியம்மன் கோயிலில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையமும் இணைந்து இந்த விழாவினை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, தெக்கூன் வாயிலாக இந்தியர்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை பொங்கல் திருநாள் சிறப்பு அறிவிப்பாக டத்தோ ஶ்ரீ இரமணன் மேடையில் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின்போது செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ். டத்தோ அன்புமணி, தெக்கூன் நேஷனலின் இயக்குநர் Dato’ Adam Bin Abd Ghani ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வண்ணமயமான கோலங்கள், தோரணங்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். வந்திருந்த சிறுவர்களுக்கு பொங்கல் அன்பளிப்பை டத்தோ ஶ்ரீ இரமணன் வழங்கினார். மேடையில் அரங்கேறிய பரதநாட்டியம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து.

விழாவில் அமைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில் புது அரிசியிட்டு பொங்கலிட்டு விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவுக்கு வந்திருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும், இதுபோன்ற விழாக்கள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சுங்கை பூலோவைச் சேர்ந்த அம்மணி நாகப்பன் தெரிவிக்கயில், காலம் மாறிப்போனாலும், பொங்கல் வைத்து கொண்டாடும் வழக்கம் தொடர்ந்து நிலைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
முதல் முறையாக கோயிலில் பொங்கல் வைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் அம்சவாணி சுகுமாறன் .
பெரும்பாலும் தங்கள் வீட்டில் பொங்கல் வைக்கும் வழக்கம் கொண்ட இந்திராகாந்தி, இந்த முறை டத்தோ ஶ்ரீ இரமணனின் அழைப்பின் பேரில் கோயில் ஏற்பாடு செய்யப்பட்டப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைப்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
இவ்விழா, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.