பட்டர்வொர்த், ஜன.16-
கடந்த செவ்வாய்க்கிழமை பட்டர்வொர்த், பந்தாய் ரோபினா கடற்கரையில் ஒரு கைத்துப்பாக்கி, துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளடக்கிய உறை, 67 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் விற்பனைப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையில் பட்டர்வொர்த் உயர் நீதிமன்ற பதிவதிகாரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 28 வயதுடைய அந்த ஆடவரை இன்று தொடங்கி ஜனவரி 27 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே இரண்டு குற்றப்பதிவுகளை கொண்டுள்ள அந்த நபர், பட்டர்வொர்த், தெலுக் ஆயர் தாவாரில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் வழக்கு தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழியின் மாமனார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர், அவசர அவசரமாக தன்னிடம் இருந்த சுடும் ஆயுதத்தையும், துப்பாக்கித் தொட்டாக்களையும் கடற்கரையோரத்தில் வீசியதாக நம்பப்படுகிறது.
ஒரு கறுப்பு நெகிழிப்பையில் சுற்றப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் தோட்டாக்களையும் தாங்கள் கண்டதாக அந்த கடற்கரையில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பினாங்க மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அகமட் தெரிவித்தார்.