புத்ராஜெயா, ஜன.16-
நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து, சட்டவிரோதப் பண மாற்றம் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் பல வங்கி அதிகாரிகள், விரைவில் கைது செய்யப்படலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது.
நிதி ஆலோசனை நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயலில் சம்பந்தப்பட்டுள்ள வங்கி அதிகாரிகளின் செயல்கள், தற்போது ஆராயப்பட்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கும்பலுடன் சேர்ந்து, மேலும் சில தனிநபர்கள் இந்த மோசடி வேலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
எஸ்.பி.ஆர்.எம். தொடங்கிய ஓப்ஸ் ஸ்கை நடவடிக்கையின் மூலம் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.