கோலாலம்பூர், ஜன. 18-
குற்றம் நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் ஒரு நபரின் கைப்பேசியை போலீஸ் துறை அபகரிக்க முடியும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறியிருப்பது தொடர்பில் அது குறித்து ஐஜிபி தெளிவுபடுத்த வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐஜிபியின் இந்த அறிவிப்பு கவலையை அளிக்கிறது என்று சுஹாகாம் கூறுகிறது.
சாலைத்தடுப்பு சோதனைகளில் போலீசாரால் பரிசோதனைக்கு ஆளாகும் ஒரு வாகனமோட்டியின் கைப்பேசியை போலீசார் தன்னிச்சையாக பறிமுதல் செய்து, சோதனை செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அந்த ஆணையம் கூறுகிறது.
குறிப்பாக, போலீஸ்துறையினரால் தடுக்கப்பட்டாலோ, விசாரிக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பொது மக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு இருக்க வேண்டும் என்பதே சுஹகாமின் வாதமாகும்.
இந்நிலையில் ஒருவரின் கைப்பேசியை பறிப்பதும், அதனை சோதனையிடுவதும் எத்தகைய சூழலில் மட்டுமே முடியும் என்பதை பொது மக்களுக்கு போலீஸ் படைத் தலைவர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று சுஹாகாம் கேட்டுக்கொண்டுள்ளது.