கோலாலம்பூர், ஜன. 18-
சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ள அகமட் தெரிரிருடின் , பதவி விலக வேண்டும் என்று நாட்டின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முதன்மை சட்ட ஆலோசகருமான முகமட் ஷாபி அப்துல்லா இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்துறை தலைவராக பதவி வகித்த காலத்தில் நஜீப் சம்பந்தப்பட்ட அரசாணை தொடர்பில், நீதிமன்றத்தை குழப்பியிருக்கும் அகமட் தெரிரிருடின் , தனது செயலுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று தற்போதைய தனது கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியை துறக்க வேண்டும் என்று ஷாபி அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
நாட்டின் சட்டத்துறை தலைவராக பதவி வகித்த காலத்தில் நஜீப் விவகாரத்தில் 16 ஆவது மாமன்னர் பிறப்பித்துள்ள ஓர் அரசாணை உத்தரவு உள்ளது என்பதை நன்கு தெரிந்திருந்தும், எதுவும் நடவாது போல அகமட் தெரிரிருடின் நடந்து கொண்டுள்ளார் என்று ஷாபி அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக அகமட் தெரிரிருடின் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் சட்டத்துறை தலைவராக பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
நஜீப் தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு ஓர் அரசாணை உத்தரவு இருப்பதாக சர்ச்சை உருவான போது, நாட்டின் சட்டத்துறைக்கு தலைமையேற்றுள்ள அட்டார்னி ஜெனரல் என்ற முறையில் அகமட் தெரிரிருடின் இவ்விவகாரத்தை உடனடியாக விளக்கி, அந்த உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்க வேண்டும்.
ஆனால், அதனை செய்யாமல், அந்த அரசாணை உத்தரவை ஒரு மூடுமந்திரம் போல் மறைத்ததன் காரணமாகவே இன்று இத்தனை சிக்கல்களையும், வில்லங்களையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு பலர் ஆளாகியிருக்கின்றனர் என்று ஷாபி அப்துல்லா வாதிட்டுள்ளார்.