கோலலங்காட், ஜன. 21-
சிலாங்கூர் மாநில இந்தியர் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவான ஐசீட் மூலமாக தங்கள் தொழில்துறைக்கான உதவிப் பொருட்களைப் பெற்றவர்கள், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.
மூவாயிரம் ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறுகின்ற சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சொந்தமாக சிறுதொழில் புரிகின்ற இந்தியர்கள், ஐசீட் மூலமாக சிலாங்கூர் அரசு வழங்கக்கூடிய உதவிப் பொருட்களைக் கொண்டு, தங்கள் வாழ்க்கையில் அடுத்தக் கட்ட நிலைக்குச செல்ல வேண்டும் என்பதே தம்மடைய எதிர்ப்பார்ப்பாகும் என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.
தொழிலுக்குத் தேவையானப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு பயன்படுத்தாமல் இருப்பார்களேயானால் யாருக்கும் பயன் இல்லை என்று பாப்பாராய்டு நினைவுறுத்தினார்.
இன்று சிலாங்கூர் பந்திங்கில் தனது சேவை மையத்தில் கோலலங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 22 இந்தியர்களுக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள ஐசீட்டின் உதவிப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாப்பாராய்டு இவ்வாறு விவரித்தார்.
ஐசீட் பிரிவின் தலைவர் மாதவன் முனியாண்டி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த உதவித் திட்டங்கள், சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்கு தகுதி அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் வேளையில் இதற்கு ஆதரவு நல்கி வரும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடீன் ஷாரிக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
உதவிப் பொருட்களைப் பெற்ற கோலலங்காட்டை சேர்ந்த தேவி கூறுகையில் தம்முடைய சிரமங்களுக்கு இறைவன் கொடுத்த உதவியாக இந்த உதவித் திட்டத்தைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
ஒரு மெக்கானிக்கான வினோத் கண்ணன் கூறுகையில் கார்கள் மற்றும் லோரிகளைப் பழுதுபார்ப்பதற்குரிய உபகரணம் தமக்கு வழங்கப்பட்டது மூலம் தமது தொழிலுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கு தமக்கு மீன்பிடி படகுக்கான இயந்திரம் வழங்கப்பட்டதற்கு பந்திங் சட்டமன்ற உறுப்பினரான பாப்பாராய்டுக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஒரு மீனவரான கணபதி ராமச்சசந்திரா தெரிவித்தார்.
இந்தியர்களுக்கான ஐசீட்டின் இந்த உதவித் திட்டம் ஒன்பது மாவட்டங்களில் 56 சட்டமன்றங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இந்தியர்கள் இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பராய்டு தமது உரையில் வலியுறுத்தினார்.