கோலாலம்பூர், ஜன.23-
அவதூறு வழக்கில் தோல்விக்கண்ட பாஸ் கட்சியைச் சேர்ந்த கெப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்தூரா, டி.எ.பியின் மூன்று முன்னணி தலைவர்களுக்கு வழங்க வேண்டிய 8 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் இழுப்பீட்டுத் தொகையை செலுத்தி விட்டார்.
இந்த இழப்பீட்டுத் தொகை, DAP மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் ஆகியோரை பிரதிநிதிக்கும் எஸ்.என் நாயர் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவதூறு வழக்கில் DAP- யின் மூன்று தலைவர்களுக்கு கிடைத்த வெற்றியை எதிர்த்து, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் வரையில் அந்தப் பணம், வழக்கறிஞர் நிறுவனத்தின் வங்கி கணக்கிலேயே வரவு வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பெண் எம்.பி.யின் வழக்கறிஞர் யுஸ்பாரிசான் யூசோப் தெரிவித்தார்.
லிம் கிட் சியாங், லிம் குவான் எங் மற்றும் திரேசா கொக் ஆகியோர் தடை செய்யப்பட்ட மலாயா முன்னாள் கம்யூனிஸ்டுத் தலைவர் சின் பெங்கின் உறவினர்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சித்தி மஸ்தூரா, பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அந்த மூன்று DAP தலைவர்களும் அந்த பாஸ் எம்.பி.க்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்து வெற்றி பெற்றனர்.