புத்ராஜெயா, ஜன.24-
1எம்டிபி நிதி மோசடி வழக்கில் நஜிப் ரசாக் 26 நாட்கள் சாட்சியம் அளித்த பிறகு சாட்சி கூண்டிலிருந்து வெளியேறினார். அவர் டிசம்பர் 2 முதல் சாட்சியம் அளித்து வந்தார். இதில் 16 நாட்கள் நேரடி விசாரணையும் மறு விசாரணையும், 10 நாட்கள் அரசு தரப்பு குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. தற்காப்பு தரப்புக்காக 25 சாட்சிகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபீ அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நஜிப் தனது சாட்சியத்தில், தனியார் துறையில் தனக்கு அதிக அனுபவம் இல்லை என்றும், அரசியலுக்கு வருவதற்கு முன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பணிபுரிந்ததாகவும் கூறினார். மேலும், 1எம்டிபி திட்டத்தில் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், அதில் சில நன்மைகளும் உள்ளன என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
நஜிப் மீது 2.28 பில்லியன் ரிங்கிட் பண மோசடி செய்ததாக 25 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு எதிர்வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அரசு தரப்பு முதல் நிலை ஆதாரங்களை சமர்ப்பித்ததை அடுத்து, நஜிப் தன்னை தற்காத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.