பெட்டாலிங் ஜெயா, ஜன.26-
கல்லூரி , பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்முறைப் பயிற்சி அளிக்க நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் அரசின் புதிய கொள்கை, வணிகச் செலவுகளை அதிகரித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தக்கூடும் என்று தொழில் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த கொள்கையின்படி, ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் மூன்று உள்ளூர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது மலேசியாவை வெளிநாட்டு முதலீடுகளுக்கு குறைவான கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் என்று MICCI எனப்படும் மலேசிய அனைத்துலக வர்த்தக, தொழில் சபையும் MEF எனப்படும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.
இந்த கொள்கை அடுத்தாண்டு ஜனவரி 1, முதல் முழுமையாக நடப்புக்கு வரும். சிறிய , நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த கொள்கை சவால்களை ஏற்படுத்தும் என்றும், பயிற்சி அளிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட அரசு வழங்கும் வரி சலுகைகள் போதுமானதாக இருக்காது அவை கூறுகின்றன. வெளிநாட்டு வல்லுநர்களின் தேவை உள்ள தொழில்களுக்கு இந்த கொள்கை தடையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய பயிற்சித் திட்டம் சுமார் ஒரு இலட்சம் உள்ளூர் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.