கோலாலம்பூர், ஜன.26-
நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர்களான மான் வெய் சொங்கும் தீ காய் வூனும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் வாகை சூடியுள்ளனர். இறுதியாட்டத்தில் அவர்கள் உபசரணை நாட்டு வீரர்கள் பாஜார் அல்பியான்-முகமட் ரியான் அர்டியண்தோவை நேரடி செட்களில் தோற்கடித்தனர்.
இதற்கு முன் மலேசிய பொது பூப்பந்து போட்டியில் மான் வெய் சொங்-தீ காய் வூன் அரையிறுதி சுற்று வரை முன்னேறினர். கடந்த வாரம் இந்திய பொது பூப்பந்து போட்டியில் அவர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறினர்.

இவ்வேளையில் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகள் பெர்லி தான்-எம்.தீனா இரண்டாம் இடத்தை வென்றனர். இறுதியாட்டத்தில் அவ்விருவரும் தென் கொரிய ஜோடி கொங் ஹீ யொங்-கிம் ஹியே ஜியோனிடம் மூன்று செட்களில் தோல்வி கண்டனர். மலேசிய பொது பூப்பந்து போட்டியிலும் இந்திய பொது பூப்பந்து போட்டியிலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு சோபிக்காத நிலையில், இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் கிடைத்த இரண்டாவது இடம் பெரும் ஆறுதலாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.