சிங்கப்பூர், ஜன.26-
சிங்கப்பூரில் Punggol எனுமிடத்தில் வீடமைப்புப் பகுதியொன்றில் தீ பரவியதை அடுத்து ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். சுமார் 60 குடியிருப்புவாசிகள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். Punggol, Sengkang, Tampines தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியதாக சிங்கப்பூர் பொது தற்காப்புப் படை தெரிவித்தது.
ஏழு மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து கரும் புகை வெளியேறியுள்ளது. வீடு ஒன்றில் இருந்த படுக்கையறையில் இருந்து தீ முதலில் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நால்வர் உடனடியாக வெளியேறிவிட்டனர். மற்றவர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர்.
அத்தீச் சம்பவத்தில் கரும் புகையைச் சுவாசித்த காரணத்தால் மூச்சுத் திணறிய ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். படுக்கையறையில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு தீ பரவியிருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.