பெட்டாலிங் ஜெயா, ஜன.27-
மலேசிய பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்தி மைகாட் அட்டையைப் பெறுவதற்கு முயற்சி செய்த அந்நிய மாது ஒருவர், தேசிய பதிவு இலாகாவினால் கைது செய்யப்பட்டார்.
சொந்த தொழில் நடத்தி வரும் இந்தோனேசியா, மேடானைச் சேர்ந்த அந்த மாது, மலேசியர் ஒருவருக்கு சொந்தமான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, மை கார்ட் அட்டைக்கு விண்ணப்பித்த போது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியதாக தேசிய பதிவு இலாகாவின் அமலாக்கப்பிரிவுத் தலைவர் காய்ரு பர்ஹாட் தெரிவித்தார்.
பகாங், குவாந்தான் கெம்பாடாங்கைச் சேர்ந்த அந்த இந்தோனேசிய மாது, குவாந்தான் தேசிய பதிவு இலாகா அலுவலகத்தில் கை கார்ட் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார்.
அந்த மாது போலி ஆவணங்களை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து நேற்று நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டதாக காய்ரு பர்ஹாட் தெரிவித்தார்.
போலி ஆவணங்களை விற்பனை செய்யும் கும்பலிடமிருந்து அந்த மாது, 8 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மலேசியருக்கு சொந்தமான பிறப்புப் பத்திரத்தை விலைக்கு வாங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.