பினாங்கு, ஜன.28
பினாங்கு மாநிலத்தின் வீடமைப்பு வாரியத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வாடிக்கையாளர்களை சந்திக்கும் முதலாவது கூட்டம் நேற்று ஜனவரி 26ஆம் தேதி பினாங்கு, KOMTAR கட்டத்தின் மூன்றாவது மாடியில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கூட்டத்தை பினாங்கு வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு பினாங்கு வீடமைப்பு வாரியத்தின் வர்த்தக தலைமை செயல்முறை அதிகாரி Haji fakhurrazi Ibnu Omar, சட்ட அமலாக்க தலைமை அதிகாரி Nadzifah Abdul Rahman, Ideal Property Group செயலாக்க தலைமை அதிகாரி Dato Goh Teng Whoo, Iconic Worldwide Berhad நிர்வாக இயக்குநர் Jason Chung Wei Chiun ஆகியோர் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில அரசாங்கம், வீடமைப்பு வாரியத்தின் வாயிலாக வழங்கி வரும் சேவைகள் மக்களை சென்றடையவும், அவர்களின் வீட்டு விண்ணப்பத்தை துரிதமாக்கவும் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சந்திப்பு நிகழ்வு இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

Rumah MutiaraKu வீடமைப்புத்திட்டத்தில் விண்ணப்பம் செய்யவும், விவரங்களை அறிந்து கொள்வதற்கும் வாடிக்கையாளர்களுடனான இந்த சந்திப்பில் 1,593 பேர் கலந்து கொண்டதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் Barat Daya மாவட்டத்தில் Maldives Residences வீடமைப்புத்திட்டம் மற்றும் Seberang Perai Tengah மாவட்டத்தில் Iconic வீடமைப்புத்திட்டம் ஆகியவற்றில் வீடு கிடைத்தவர்களுக்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு, உறுதி கடிதங்களையும் வழங்கி, தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
