ஜோகூர் பாரு, ஜன.28
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜோகூர்பாரு, தாமான் அபாட்டில் உள்ள வர்த்தக வளாகத்தில் தம்மை கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் மாது ஒருவர் அளித்துள்ள புகார் பொய்யானதாகும் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 22 ஆம் தேதி 45 வயதுடைய அந்த சிங்கப்பூர் மாது செய்து கொண்ட புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அந்த வணிகத் தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் அப்படியொரு கடத்தல் முயற்சிகள் நடந்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்பது சிசிடிவி கேமரா வழி தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாதுவிடம் நடத்தப்பட்டதாக கூறப்படும் கடத்தல் முயற்சி போன்ற எந்த அசைவுகளும் கண்டறியப்படவில்லை என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.
அந்த மாது அளித்துள்ள புகாரின்படி தேநீரை விற்பதற்கு ஓர் ஆணும், பெண்ணும் தன்னை அணுகியதாகவும், அவர்கள் அந்த தேநீரின் மணத்தை நுகரும்படி கேட்டுக்கொண்ட போது, அதனை நுகர்ந்த அடுத்த கணமே தாம் மயக்கமுற்று சுயநினைவை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பொய் புகார் அளித்ததற்காக அந்த சிங்கப்பூர் மாது குற்றவியல் சட்டம் 182 ஆவது பிரிவின் கீழ் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.
ஜோகூர்பாரு குற்றவியல் சம்பவங்களுக்கான தளம் போன்று மக்கள் பாதுகாப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தவறான சித்தரிப்புகளை பரப்பி வரும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ குமார் எச்சரித்தார்.