பூச்சோங், ஜன.28-
பூச்சோங், 14 ஆவது மைல், கம்போங் பூஙா மெலோரில் முகமூடி அணிந்த ஆயுதமேந்திய கும்பல், வீடொன்றில் நடத்திய கொள்ளை மற்றும் இருவர் வெட்டுக்கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.13 மணியளவில் பூட்டடப்படாத வீட்டுக்குள் நுழைந்து, நடத்தப்பட்ட கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் பைருஸ் ஜாபார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் வெட்டுக்கத்தியினால் தாக்கப்பட்டு காயங்களுக்கு ஆளான இருவர், செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் உள்ளூரைச் சேர்ந்த 23 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வெட்டுக்கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
பிடிபட்ட ஆறு பேருக்கும் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றப்பதிவுகள் இருப்பதாக பைருஸ் ஜாபார் மேலும் கூறினார்.
11 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல், தரை வீடொன்றில் நுழையும் காட்சியைக் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.