கோலாலம்பூர், ஜன.28-
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் இருப்புப் பாதைக்குள் அத்துமீறி நுழைந்த ஐவரை ரயில் மோதித் தள்ளியதில் ஒருவர் பலியான வேளையில் இதர நால்வர் படுகாயத்திற்கு ஆளாகினர்.
இச்சம்பவத்தினால் KTMB- ரயில் சேவையில் 60 நிமிடங்களுக்கு மேல் இடையூறு ஏற்பட்டது. காயமுற்ற நால்வர் தற்போது கிள்ளான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 6.39 மணியளவில் கிள்ளான், தெலுக் பூலாய்க்கும் கிள்ளானுக்கும் இடையில் நிகழ்ந்தது. 200 பயணிகளுடன் கோலக்கிள்ளான், ஜாலான் கஸ்தாம் நிலையத்திலிருந்து புறப்பட்ட 2110 ரயில், 34.734 ஆவது கிலோமீட்டரில் அத்துமீறி நுழைந்த ஐவரை மோதியதாக KTMB இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.