ஜன.29-
நாடு முழுவதும் உள்ள சீன சமூகத்தினர் தங்களின் வருடாந்திர பெருவிழாவான சீனப்புத்தாண்டை இன்று ஜனவரி 29 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
சீனப்புத்தாண்டு காலவரிசையில் இது பாம்பு ஆண்டாகும். பாம்பின் குணம், அதன் வளர்ச்சியையும் மேன்மையும் உறுதி செய்யும் என்பது சீன சமூகத்தின் ஐதீகமாகும். நாட்டின் முன்னணி சீன அரசியல் கட்சியான மசீச இன்று தனது புத்தாண்டு பொது உபசரிப்பை வெகுவிமரிசையாக நடத்தியது.
இந்நிகழ்வில் வெளிநாட்டவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மலேசியாவின் பன்முக கலாச்சார ஒருமைப்பாட்டின் துடிப்பை இந்த சீனப்புத்தாண்டில் காண முடிகிறது என்று ஒரு பிரிட்டிஸ் பிரஜையான Joel Burch தெரிவித்தார்.
தாமும், தமது வருங்கால மனைவியும் நேற்று மலேசியா வந்தததாக கூறினார். இந்த ஆண்டு சீனப்புத்தாண்டு தினத்தை மலேசியாவில் கழிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.
எனது தாயார் ஒரு மலேசியர். தந்தை, பிரிட்டடிஷ்காரர். சீனப்புத்தாண்டை இங்கிலாந்தில் பார்ப்பதற்கும், மலேசியாவில் அனுபவிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை முதல் நாளிலேயே தம்மால் உணர முடிந்ததாக அவர் கூறுகிறார்.
மலேசியாவில் குறிப்பாக கோலாலம்பூர் மாநகரில் பிரமிக்கவைக்கும் அலங்காரங்கள், மக்கள் குதூகலத்தில் திளைத்திருப்பது, அனைவரையும் தங்களின் விருந்தாளிகளைப் போல புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்து இருப்பது தம்மை பிரமிக்க வைக்கிறது என்று அந்த பிரிட்டிஷ் பிரஜை தெரிவித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த மூத்த குடிமகனான சிவதாஸ் கூறுகையில் சீனப்புத்தாண்டு போன்ற பண்டிகைகளில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவது மலேசியாவின் பாரம்பரியத்தின் தனித்துவத்தை உணர்த்துகிறது என்றார்.
ஹரிராயா, சீனப்புத்தாண்டு, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை திறந்த இல்ல உபரிசப்புடன் இல்லங்களில் கொண்டாடி மகிழ்கிறோம். இது பல்வேறு இணங்களுக்கு இடையில் ஒற்றுமையையும், வளப்பத்தையும், நல்லிணக்கத்தையும் விதைப்பதாக உள்ளது என்று சிவதாஸ் தெரிவித்தார்.