உத்தர பிரதேசம், ஜன.30-
இந்தியா, உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கும்பமேளாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மவுனி அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. புனித நீராடும் சங்கம் காட் பகுதிக்கு அருகே இருந்த தடுப்பு கட்டை உடைந்தது. இதனால், பல பக்தர்கள் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கிய சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிலர் கீழே விழுந்தனர். பின்னர், அவர்கள் மீது மற்றவர்களும் விழுந்தனர்.
பின்னர், போலீசார், தீயணைப்பு வீரர்கள், துணை ராணுவப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மகா கும்பமேளாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.