குவேட்டா, ஜன.30-
பாகிஸ்தான், குவேட்டாவில் தந்தை ஒருவர் தமது சொந்த மகளையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். 15 வயதான அவரது அம்மகள் டிக் டாக்கில் பதிவேற்றியிருந்த பதிவுகள் அநாகரிகமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த அத்தந்தை அச்செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தமது மகளைச் சுட்டுக் கொன்று விட்டதாக தொடக்கத்தில் அந்த ஆடவர் கூறியிருந்தார். எனினும் பின்னர் அவர் தாம்தான் அவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டார்.
அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரைத் தவிர்த்து உறவினரான மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட 15 வயது இளம் பெண் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் உடை உடுத்தும் விதம், வாழ்க்கை முறை, சுதந்திரமாகப் பழகும் செயல் ஆகியவற்றில் அத்தந்தைக்கு உடன்பாடில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆடவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராவார்.
அவரது கைப்பேசி பறிமுதல் செயப்பட்டுள்ளது. குடும்ப கௌரவத்திற்காக அவ்விளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.