பாலிங், ஜன.30-
கெடா பாலிங் மாவட்டத்தில் உள்ள கோலக்கெட்டில் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி தனது 70 ஆண்டு கால அடையாளத்தை இழக்கவிருக்கிறது.
கத்தும்பா தோட்டத்தில் இயங்கி வந்த இத்தமிழ்ப்பள்ளி, தற்போது இடமின்றி தத்தளித்துக் கொண்டு இருப்பதாக சுற்று வட்டார மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

1950 ஆம் ஆண்டில் சைம் டார்மி நிலத்தில் அமைந்திருந்த கத்தும்பா தமிழ்ப்பள்ளி, பாதுகாப்பான நிலத்தில் இல்லை என்றும் பள்ளி அமைந்துள்ள நிலம் விற்கப்பட்டு விட்டதாகவும் கெடா மாநில கல்வி இலாகா 2024 ஆம் ஆண்டில் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து கடிதம் ஒன்றினைப் பெற்றது.
அக்கடிதத்தின் அடிப்படையில் கெடா மாநில கல்வி இலாகா, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கத்தும்பா தோட்ட தமிழ்ப்பள்ளி, தோட்டத்திலிருந்து இடம் மாற்றம் செய்து பெக்கான் தாவார் தேசிய பள்ளியிலுள்ள ஒரு பகுதி கட்டிடத்தில் இயங்குவதற்கு வகை செய்தது. இனி இப்பள்ளி புதிய இடத்திலேயே இயங்கலாம் என்று மாநில கல்வி இலாகா உறுதி அளித்து இருந்தது.

பத்து மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் இயங்கி வரும் வரலாற்று சிறப்புமிக்க கத்தும்பா தமிழ்ப்பள்ளி, வழங்கப்பட்ட புதிய இடத்திலும் தொடர்ந்து இடம் கிடைக்காமல் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக அப்பள்ளியின் வாரியக் குழு தலைவர் கிருஷ்ணன் முனியாண்டி கூறினார் .
பெக்கான் தாவார் தேசிய பள்ளியிலிருந்து கத்தும்பா தமிழ்ப்பள்ளி வெளியேற வேண்டும் என்று 7 நாட்களுக்கு முன்பு பாலிங் கல்வி இலாகா,கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளதாக கிருஷ்ணன் முனியாண்டி விவரித்தார்.

கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றுவரும் அனைத்து மாணவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யும்படி அப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு கட்டளையிட்ட பின் பெற்றோர்களும் அம்மாற்றத்தை கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாலிங் கல்வி இலாகா தனது கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கிருஷ்ணன் முனியாண்டி கூறுகிறார்.
கெடா மாநில கல்வி இலாகா தன்மூப்பாக எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையில் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் கத்தும்பா தமிழ்ப்பள்ளியை மாற்றுவதற்கு கல்வி அமைச்சர் பட்லீனா சீடெக் உ டனடியாக ஆவனம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணன் முனியாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.