ஜோர்ஜ்டவுன், ஜன.30-
மலேசியாவில் மிகவும் பாதுகாப்பான மாநிலமாக பினாங்கு அங்கீகரிக்கப்பட்டதற்கு நன்றியுணர்வுடன் நாம் இருக்கும் அதேவேளையில் பினாங்கு சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மையமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து பினாங்கு முதலமைச்சர் சோவ் கொன் யோவ் கவலை தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தின் பரந்த நீர்பரப்பும், தாய்லாந்தின் அருகாமை சூழலும், பினாங்கு தீவை இயல்பாகவே போதைப்பொருள் மற்றும் இதர கடத்தல் பொருட்களுக்கான ஒரு போக்குவரத்து மையமாக மாற்றி வருகிறது.
பினாங்கு பல ஆண்டு காலமாக கடும் குற்றங்கள் மற்றும் கொள்ளைகள் போன்ற குற்றவியல் சம்பவங்களிலிருந்து விடுப்பட்டு, அத்தகைய குற்றச்செயல்கள் குறைந்து, தற்போது மாநிலம் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால், வடக்கில் இருந்து வரும் நிலப்பகுதி மற்றும் கடல் சூழல் போன்றவை கடத்தலுக்கான ஒரு மையம் போல் ஆக்கி வருகிறது. இதனை நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்று பினாங்கில் இன்று நடத்திய சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பின் போது சோவ் கொன் யோவ் இதனைத் தெரிவித்தார்.