கோலாலம்பூர், பிப்.3-
இணையம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் மற்றும் நிந்தனை தன்மையிலான தகவல்களை பரப்புகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுப்பதில் அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மக்களிடையே பிரிவினையையும், பேதங்களையும் ஏற்படுத்தி, குளிர்காய முற்படுகின்றவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
இன்று 15 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மாமன்னர் மேற்கண்டவாறு கூறினார்.
இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படும் அவதூறு மற்றும் சட்டவிரோத கலாச்சாரத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து தாம் மிகுந்த கவலை கொள்வதாக மாமன்னர் குறிப்பிட்டார்.
Online வாயிலாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி மாமன்னர் அறிவுறுத்தினார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுடன் நம்பகமான தகவல்களை வழங்க முனைப்புக் காட்ட வேண்டும்.
அதேவேளையில் நாடாளுமன்றம் போன்ற மக்களவை ,ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தளமாக இருக்க வேண்டுமே தவிர பிரிவினையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதையும் மான்னர் தமது உரையில் வலியுறுத்தினார்.