ஜோகூர் பாரு, பிப்.3-
ஜோகூர் பாருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அருகில், ஜாலான் தெப்ராவில் நேற்று இரவு ஒரு டொயோட்டா வியோஸ் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு குடும்பத் தகராறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஜோகூர் பாரு செலத்தான் மாவட்டத்தின் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ரவூப் செலமாட் கூறுகையில், கார் உரிமையாளரின் கணவரே இந்த தீச்சம்பவத்தை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர் சுமார் 90 ஆயிரம் நட்டத்தைச் சந்தித்துள்ளார். 25 வயதான கணவர், 21 வயதான மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அதிருப்தியில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் இரவு 10.20 மணிக்கு நிகழ்ந்துள்ளது. கணவர் தனது Toyota Vellfire காரில் வந்து, மனைவியின் காரை வழிமறித்து, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் மனைவியின் கார் 80 விழுக்காடு எரிந்து நாசமானது. மனைவி மஜீடீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 435 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.