கோலாலம்பூர், பிப்.3-
நாட்டின் தாய்க்கோவிலாக விளங்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் மேற்குகைக்கு செல்வதற்கு நகரும் மின்படிக்கட்டுத் திட்டம் மற்றும் பல நோக்கு மண்டபம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரிழ் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி பத்துமலைத்திருத்தலத்தில் தைப்பூச விழா கொண்டாடப்படுவதையொட்டி, மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று திங்கட்கிழமை மாலையில் பத்துமலை திருத்தலத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானத்தின் முக்கியப் பொறுப்பாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் நிர்வாகத்தினருடன் சில முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டார்.
நாங்கள் விவாதித்து, தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்ட முக்கிய விவகாரங்களில் நகரும் மின்படிக்கட்டான escalator நிர்மாணிக்கும் திட்டமும் அடங்கும். இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக கருதுகிறேன். அத்துடன் இன்றைய சந்திபில் கோவில் நிர்வாகத்தினர் பல நோக்கு மண்டபம் தொடர்புடைய ஒரு மேம்பாட்டு உத்தரவு அல்லது திட்டமிடல் அனுமதிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக நான் ஒப்புக்கொண்டுள்ளேன். இதற்கு சற்று கால அவகாசம் தேவை. இருந்த போதிலும் இதற்கான அனுமதி வழங்கியப் பின்னர் பல நோக்கு மண்டபத்தை நிர்மாணிக்கும் பணி தொடங்கப்படும் என்று நம்புகிறேன் என அமிருடின் ஷாரி விவரித்தார்.
முன்னதாக, கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அமிருடினின் ,பத்துமலைத் திருத்தல வருகையையொட்டி தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா மாலை அணிவித்து சிறப்பு செய்தார். அத்துடன் பத்துமலையில் மேற்கொள்ளப்படும் இரண்டு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மந்திரி பெசாருக்கு விளக்கம் அளித்ததுடன், அத்திட்டங்கள் தொடர்புடைய ஆவணங்களையும் மந்திரி பெசாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் அறங்காவலர் டத்தோ சிவகுமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தேவஸ்தான செயலாளர் சேதுபதி இதர தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.