கோலாலம்பூர், பிப்.4-
வரும் ஜுலை மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 85 விழுக்காடு மக்களுக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மின்சாரக் கட்டண உயர்வில் தொழில்துறையினரும், பணக்கார வர்க்கத்தினரும் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.
இந்த கட்டண உயர்வு நியாயமானதாகவே கருதப்படுகிறது. காரணம், 14 விழுக்காட்டிற்கும் குறைவாகவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேவேளையில் இந்த கட்டண உயர்வில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவற்றின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.
ஒட்டுமொத்தத்தில் 85 விழுக்காடு மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.