கோலாலம்பூர், பிப்.6-
முஸ்லிம் அல்லாதோர் விழாக்களுக்கும், சமய நிகழ்ச்சிகளுக்கும், இறப்பு சடங்குகளிலும் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு வழிகாட்டும் உத்தேச புதிய விதிமுறைகள் குறித்து, சர்ச்சை செய்ய வேண்டாம் என்று பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் கேட்டுக்கொண்டார்.
முஸ்லீம்களுக்கான இந்த உத்தேச வழிகாட்டல் விதிமுறைகள் குறித்து தவறான புரிதல்களையோ, சர்ச்சையையோ உருவாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு சர்ச்சை செய்வது பொது அமைதின்மையை ஏற்படுத்தும் டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய ஆலோசனை மன்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வழிகாட்டல்கள், ஓர் உன்னத நோக்கத்தைக் கொண்டவையாகும். மதம் சார்ந்த செயல்பாடுகள் சீராகவும், முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தளமாக இவ்விவகாரத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் அல்லாதவர்களால் ஏற்பாடு செய்யப்படும் சமய நிகழ்ச்சிகள், பண்டிகை நிகழ்வுகள் மற்றும் இறப்பு சடங்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது குறித்து ஒரு வழிகாட்டியை உருவாக்கும் பணி, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான JAKIM- மின் ( ஜாக்கிம் ) மேற்பார்வையில் இறுதி வடிவம் காணும் கட்டத்தில் இருப்பதாக அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் அறிவித்து இருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், சர்ச்சையும் ஏற்படுத்தி வருகிறது.
முஸ்லிம் அல்லாதவர்களின் நிகழ்வுகளில் முஸ்லிம் தலைவர்கள் அல்லது முஸ்லிம்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது சம்பந்தப்பட்டிருந்தால், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதலில் JAKIM போன்ற அதிகாரத் தரப்பினரின் அனுமதியையும், ஒப்புதலையும் பெற வேண்டும் என்று முஸ்லிம்களுக்கான அந்த புதிய வழிகாட்டலில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் விளக்கி இருந்தார்.
இந்த வழிகாட்டல் முறையின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களின் சமய விழா, கொண்டாட்ட நிகழ்வுகள் அல்லது மரண சடங்குகளில் கலந்து கொள்ளும் முஸ்லிம்கள் தங்களின் சமய நம்பிக்கைக்கு ஏற்ப ஆசாரங்களைக் கடைப்பிடிக்கவும், இஸ்லாமியர்களின் சமய நம்பிக்கையை பாதுகாக்கவும் முடியும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
அமைச்சர் டாக்டர் முகமட் நாயிம் மொக்தாரின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து இருப்பதைத் தொடர்ந்து நேற்று இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமைச்சர் மேற்கண்ட விளக்கத்தை தந்துள்ளார்.