கோலாலம்பூர், பிப்.7
புதிய சட்ட விதிகளை இயற்றி, முஸ்லிம்களை கண்காணிக்கும் அளவிற்கு அவர்களின் சமய நம்பிக்கை பலவீனமானது அல்ல என்று முன்னாள் அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மேற்பார்வையும், கண்காணிப்பும் அவசியமில்லாத ஒன்றாகும். காரணம் முஸ்லீம்களின் சமய நம்பிக்கை வலுவானதாகும். அந்த நம்பிக்கையானது, அறியாமையினால் வேரூன்றியது அல்ல. மாறாக, திடமான சமய நம்பிக்கையினால் ஆழமாக வேரூன்றியதாகும் என்று முன்னாள் அம்னோ மகளிர் தலைவியான ரபிடா குறிப்பிட்டார்.
முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தளங்கள், சமய விழாக்கள் மற்றும் இறப்புச்சடங்களில் கலந்து கொள்வது தொடர்பில் முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான புதிய வழிகாட்டல் விதிமுறைகளை உருவாக்குவதில் இஸ்லாமிய சமய மேம்பாட்டு இலாகாவான Jakim மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து கருத்துரைக்கையில் ரபிடா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மைய காலமாக சில தரப்பினர், தங்கள் செயலும், நடவடிக்கையும், / மத நம்பிக்கை மற்றும் அதன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப உள்ளனவா? என்பதை கருத்தில் கொள்ளாமலேயே மதத்தை பாதுகாப்பதாக கூறி, சில பைத்தியக்காரத்தனமான அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றனர் என்று ரபிடா சாடினார்.
மலேசியா பன்முகத்தன்மைக்கொண்ட ஒரு நாடு. பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் முஸ்லிம்கள், மற்றவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதற்கு சமய மரபும், அதற்கான வழிமுறைகளும், வரையறையும் ஒரு பெரும் வழிகாட்டலாக உள்ளன. அதனை சட்டங்கள் அல்லது விதிமுறைகள் வாயிலாகதான் கொண்டு வந்து, முஸ்லிம்களை கண்காணிக்க வேண்டும் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரபிடா குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் பல நூற்றாண்டு காலாமாக நாம் ஒற்றுமையாக வாழ்த்து வருகிறோம். ஆழமான தொடர்பை கொண்டுள்ளோம். முஸ்லிம்கள் எப்போதுமே தங்கள் மதத்தில் எது சரி, எது தவறு என்பதை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.
முஸ்லீம்களாக இருப்பவர்கள், நமது நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு வெளிப்புற உத்தரவுகள் அல்லது வழிகாட்டல்கள் மூலமாகதான் பின்பற்ற வேண்டும் என்பது தேவையில்லாததாகும் என்று ரபிடா விளக்கினார்.