பத்துமலை, பிப்.7-
பத்துமலைத் திருத்தலத்தை மேம்படுத்துவதிலும், அங்கு ஒரு பெரிய மண்டபத்தை நிர்மாணிப்பதிலும் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதில் அரசாங்கம் நிச்சயம் உதவும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இது போன்ற ஒரு மண்படத்தை நிர்மாணிப்பது மூலம் அது, இந்துக்கள் மட்டுமின்றி, உள்ளூர் சமூகத்தினருக்கும் பயன்படும். எனவே இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் உறுதியளித்தார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பத்துமலைத்திருத்தலத்தற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்களைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
உண்மையிலேயே பத்துமலைக்கு உள்ளூர் சமூகத்தினர் மட்டுமின்றி, சுற்றுப்பயணிகளும், குறிப்பாக தைப்பூசத் திருவிழாவின் போது, மில்லியன் கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்நிலையில், பத்துமலையில் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில், பத்துமலை குகைகளைச் சுற்றியுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தாம் பெரிதும் விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பத்துமலையில் பெரிய மண்டபத்தை நிர்மாணித்து, அதனை மேம்படுத்துவது மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலா தலமாக புதுப்பிக்கும் திட்டம் குறித்து தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா தமக்கு விளக்கம் அளித்து இருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
தேவஸ்தானம் முன்னெடுத்துள்ள இந்த பெரும் திட்டத்திற்கு நாங்கள் நிச்சயம் உதவுவோம். ஏற்கனவே சில நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். ஆனால் இந்த மண்டபத்தை இந்திய மக்கள் மக்கள் மட்டுமின்றி அனைவரும் பயன்படுத்தக்கூடிய பல்நோக்கு மண்டபமாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். இந்த மண்டபம் அனைத்து மக்களின் நலனுக்காக ஒரு சமூக மண்டபமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று பிரதமர் கூறினார்.