பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பத்துமலை வருகை, வெற்றியளிக்கக்கூடிய வருகையாகும் – தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா புகழாரம்

பத்துமலை, பிப்.7-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று பிற்பகலில் பத்துமலைத் திருத்தலத்திற்கு மேற்கொண்ட வருகை ஒரு வெற்றியளிக்கும் வருகையாகும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா வர்ணித்தார்.

பிரதமரின் இவ்வருகையின் போது, பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற மேம்பாடுகள் குறித்து தாம் விளக்கிக் கூறியதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பட்டார்.

குறிப்பாக அரசு பதிவேட்டில் , மேன்தை தங்கிய சிலாங்கூர் சுல்தான் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப பத்துமலை மேம்பாடுகள் நடைபெற்று இருப்பதை தாம் விளக்கிய போது, பிரதமர் மிகவும் சந்தோஷப்பட்டார். நாம் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் மிகக் கவனமாகக் கேட்டறிந்தார்.

அதேவேளையில் பத்துமலையில் கட்டப்படவிருக்கும் பல நோக்கு மண்டபம் குறித்தும் பிரதமரின் தாம் விளக்கம் அளித்ததாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் பேசி, உரிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் வரும் தைப்பூச விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொள்ளவிருக்கும் மதிப்புக்குரிய மந்திரி பெசார், நல்லதோர் அறிவிப்பை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று டான்ஸ்ரீ நடராஜா விவரித்தார்.

எது எப்படியிருப்பினும் வரும் தைப்பூச விழா முடிவடைந்ததும் பல நோக்கு மண்டபம் கட்டுவதற்கான அடிப்படை வேலைகளை தேவஸ்தானம் முன்னெடுக்கும் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் மேற்கொண்ட இந்த வருகையின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, பத்து எம்.பி. P. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS