பிப். 8-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள 2025 ஆம் ஆண்டு பட்ஜெட், மிகப்பெரிய வரவுசெலவுத்திட்டம் மட்டும் அல்ல. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் நன்மைப்பெறக்கூடிய ஒட்டுமொத்த உதவித் திட்டங்களை உள்ளடக்கியது என்பதை துணிந்து கூறுலாம்.
நிதி வளங்களின் செயல்திறன்மிக்க ஒதுக்கீட்டினூடாக சமூகப்பொருளாதார அபிவிருக்கும் இந்த பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது. அதேவேளையில் ஒரு சிறந்த பொருளாதார சூழலை உருவாக்கி, முறையான வருமான ஈட்டல் வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.
இலக்கிடப்பட்ட நிதி உதவிகள் மூலம் வறிய மற்றும் சாமானிய மக்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதியை முறையாக நிர்வகிப்பதிலும், அரசாங்க இலாகாக்களிலும், ஏஜென்சிகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள வேளையில் உயர் உற்பத்தி, பொருளாதார புத்தெழுச்சி, சேவைத்துறைகளின் அபிவிருத்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுதல் ஆகியவை நாட்டின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு மடானி அரசாங்கம், பொருளாதார மீட்சிக்கு சீரான வளர்ச்சிப்பாதைக்கு வழிகுத்துள்ளது என்று பலர் தங்களின் புகழ்மாலையை சூட்டியுள்ளனர்.
மக்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம்
நாட்டை செழுமைப்படுத்துதல் , சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல், மக்களின் நல்வாழ்வை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக, மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கும், அவர்களின் சுகாதார நலனுக்கும் பிரத்தியேக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஒரு குத்தகையாளரான மருதழகன் நாராயணசாமி. .
2025 பட்ஜெட்டில் சுகாதார அமைச்சு 45.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. அதிகமான நிதி ஒதுக்கீட்டை பெற்ற இரண்டாவது அமைச்சாக சுகாதார அமைச்சு விளங்குகிறது. 2024 இல் 41.3 பில்லியன் ரிங்கிட்டை மட்டுமே சுகாதார அமைச்சு பெற்று இருந்தது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் நல்லதொரு கழிப்பறை வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மருத்துவமனை வார்டுகளில் நீண்ட காலமாகவே சீர்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பறைகளை சீர்படுத்துவதற்கு 1.35 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு இருப்பதையும் மருதழகன் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் புறநகர் பகுதிகளில் உள்ள கிளினிக்குகளின் தரத்தை உயர்த்துவதற்கு மடானி அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அறிவித்து இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த 2023 இல் 100 மில்லின் ரிங்கிட்டாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2024 இல் 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டு, 2025 இல் 300 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ததப்பட்டுள்ளது.
கல்வி காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கான தனிநபர் வருமான வரி விலக்கு 4,000 ரிங்கிட்டாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது இந்த சலுகைகள் யாவும் மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்வை உறுதி செய்வதற்கு அரசாங்கம் வழங்குகின்ற ஒரு சலுகையாகும் என்று மருதழகன் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கைச் செலவினத்தை கையாளும் முறை
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை கையாளுவதற்கு Sumbangan Tunai Rahmah எனும் STR உதவித் தொகை 600 ரிங்கிட் என்று 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பதை ஒரு லோரி ஓட்டுநரான மருதையா பெருமாள் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த முறை STR மற்றும் SARA திட்டத்திற்கு 13 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. SARA திட்டத்தின் வாயிலாக மாதம் தோறும் வழங்கக்கூடிய 100 ரிங்கிட், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வங்கி கணக்கில் சேர்க்கப்படவிருக்கிறது.
இந்த உதவித் தொகையை பெறக்கூடியவர்கள் தங்களின் மாதாந்திர உணவு, மருந்துப்பொருட்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வதற்கு நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட பசார் ராயா மற்றும் மளிகை கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மருதையா குறிப்பிடுகிறார்.
சமூக நல இலாகாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
சமூக நல இலாகாவிற்கு இம்முறை 2.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு இருப்பது மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது என்கிறார் என். தர்மராஜா செட்டியார். இதன் பொருள், ஏழை மக்களுக்கான சமூக நல இலாகாவின் மாதாந்திர நிதி உதவி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதையே இது காட்டுகிறது என்று ஒரு வர்ததகரான தர்மராஜா கூறுகிறார்.
500 ரிங்கிட் உதவித் தொகையை பெற்று வந்த மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை 600 ரிங்கிட்டிற்கு உயர்த்தப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும் இது 100 ரிங்கிட் கூடுதலாகும்.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கான உதவித் தொகை விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. 6 வயது கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டு வந்த தலா 200 ரிங்கிட், 250 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டு வந்த தலா 150 ரிங்கிட், 200 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு கூடிய பட்சம் ஆயிரம் ரிங்கிட் வருமானமாக பெறுகின்ற குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக தர்மராஜா குறிப்பிடுகிறார்.
கூட்டரசுபிரதேசத்தில் பொது உதவித் தொகை விகிதம் 100 ரிங்கிட்டிலிருந்து 150 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சீனி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை
மக்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு 2025 பட்ஜெட்டில் அரசாங்கம் எடுத்துள்ள சில அதிரடி நடவடிக்கைகள், பாராட்டத்தக்கதாகும் என்கிறார் ஒரு பழந்தோட்ட உரிமையாளரான ஆர். மனோகரன். 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து இனிப்பு நிறைந்த பானத்திற்கு கலால் வரி லிட்டருக்கு 40 காசு உயர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
சீனி பயன்பாட்டிற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஓர் உன்னதப் போராட்டத்தை சித்தரிப்பதாக இது உள்ளது என்று மனோகரன் குறிப்பிடுகிறார். சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தென்கிழக்காசியாவிலேயே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக மலேசியா வகைப்படுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது..
நீரிழிவினால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற கொடிய நோய்கள் தாக்கும் அபாயங்கள் உள்ளன. இந்நிலையில் இனிப்புத் தன்மையிலான பானத்தின் பயன்பாட்டை மக்கள் குறைப்பதற்கு சீனி கலந்த பானத்திற்கு கலால் வரி உயர்த்தப்பட்டு இருப்பது மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும் என்று மனோகரன் குறிப்பிடுகிறார்.
மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பிற வாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழலையும் 2025 பட்ஜெட் ஏற்படுத்த வல்லதாக உள்ளது.
விவசாயத்துறையின் உற்பத்தி, மனிதவள மேம்பாட்டுடன் கூடிய சமூக நிதி, உற்பத்தி மற்றும் சேவைத்துறை, நகர் மற்றும் புறநகர் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மேம்பாடு, இளையோர்களுக்கான சீர்திருத்தங்கள் என ஒட்டுமொத்ததத்தில் சாமானிய மக்களைக் கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் சிறந்து விளங்குகிறது என்று மனோரகன் குறிப்பிடுகிறார்.