கிள்ளான், பிப்.9-
கிள்ளான், ஜாலான் காப்பாரில் சட்டவிரோதமாக மின்னணு கழிவுகளைப் பதப்படுத்தும் ஓர் இடத்தின் நடவடிக்கைகள் அதிகாரிகளால் நேற்று சோதனை செய்யப்பட்டதில் 10.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நண்பகல் 12 மணியளவில் பட்டாலியன் 4 PGA படை, சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை, கிள்ளான் மாநகர் மன்ற அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். இப்பகுதியில் சட்டவிரோத கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக பட்டாலியனின் பொறுப்பாளர் சுப்ரிண்டெண்டன் ஜாப்ரி முகமட் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 120 டன் தாமிர உலோகம், 100 டன் அலுமினிய உலோகம், 80 டன் எஃகு உலோகம், இரண்டு அமுக்கும் இயந்திரங்கள் , 250 மின்சார மீட்டர்கள் ஆகியன அடங்கும். மேலும், மூன்று forklift களும் ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன. கம்போடியாவைச் சேர்ந்த 24, 42 வயது இரு ஆடவர்கள் அந்த இடத்தின் ஊழியர்கள் என்றும், விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.