பெட்டாலிங் ஜெயா, பிப்.9-
ஷா ஆலாமில் உள்ள செத்தியா ஆலாம் வணிக வளாகத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பைக் கடுமையாக்க தேசிய காவல்துறைத் தலைவர் ரசாருடின் ஹுசேன் உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கை குறித்து காவல் துறை அதிகாரிகளும் பாதுகாப்பு காவலர்களும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய சம்பவத்தைப் பொறுத்தவரை, சிலாங்கூர் காவல் துறையினர் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர். அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் பல்வேறு காவல் துறை பிரிவுகள் களத்தில் உள்ளன. அண்டை மாநிலங்களில் உள்ள காவல் துறையினருக்கும், எல்லைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு முதன்மையானது என்றும், சந்தேக நபரை நீதியின் முன் நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மக்களிடையே கவலைகள் எழுந்துள்ளதை தாங்கள் புரிந்து கொள்வதாகவும், ஆனால் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய எந்தவோர் ஊகங்களையும் பொதுமக்கள் வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.