பெட்டாலிங் ஜெயா, பிப்.9-
இந்திய சமூகத்திற்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான MISI எனப்படும் Malaysian Indians Skills Initiative திட்டத்தின் கீழ், கனரக டிரக் ஓட்டுநர்களுக்கு உயர் மதிப்பு திறன்களை வழங்குவதன் மூலம் தொழிலாளர் ஆற்றலை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அவர்கள் அதிக வருமானத்தையும் சிறந்த வேலை வாய்ப்புகளையும் பெற முடியும். இந்த கனரக டிரக் ஓட்டுநர் பயிற்சித் திட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஓட்டுநர்கள் தொழில் முனைவோர் துறையில் நுழையலாம், முன்னணி தொழில்போக்குவரத்து நிறுவனங்களில் வேலை பெறலாம் அல்லது நிர்வாகப் பதவிகளுக்கு உயரலாம். CILT அங்கீகாரம் பெற்ற இந்தப் பயிற்சித் திட்டம், சுற்றுச்சூழல், சமூக, நிர்வாகத் தேவைகளுக்கும் பன்னாட்டு பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்பவும் உள்ளது. நேற்று கிள்ளானில் தொடங்கிய 3 நாள் பயிற்சித் திட்டம், பிப்ரவரி 15 ஆம் தேதி மீண்டும் நடத்தப்பட்டு பிப்ரவரி 22 ஆம் தேதி முடிவடையும்.
இந்தத் திட்டம் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் மனிதவள அமைச்சால் முன்னெடுக்கப்படும் ஒரு முன் முயற்சியாகும். இது குறிப்பிட்ட தொழில்துறைப் போக்குவரத்து படிப்புகளுக்கு வலுவான தேவையைக் காட்டுவதாகக் கூறுகிறது. அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் இந்திய சமூகத்தைச் சேர்ந்த திறமையானவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உறுதிச் செய்கின்றது.
கடந்த மே மாதத்தில் MISIயைச் செயல்படுத்த அமைச்சு வழங்கிய 30 மில்லியன் ரிங்கிட், இந்திய சமூக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்தார்.
நேற்று இந்த பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் மித்ராவின் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் கலந்து கொண்டார். டிரக் ஓட்டுநர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியமான சான்றிதழையும் நிபுணத்துவத்துடன் கூடிய பயிற்சியையும் அளிப்பதே MISIயின் குறிக்கோளில் இது மேலும் ஒரு முன்னெடுப்பாகும் எனக் கூறினார்.