கூலிம், பிப்.9-
புகைப் பிடிப்பவர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடித்ததற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அபராதம் விதித்தால், அவர்களைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மலேசிய மக்களில் 80 விழுக்காட்டினர் புகைபிடிக்காதவர்கள் என்பதால், களத்தில் பணிபுரியும் அதிகாரிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறினார். பொது சுகாதாரத்திற்காகப் புகைக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் 2024இன் அமலாக்கம் மக்களின் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வேப் அல்லது மின் சிகரெட்டுகளின் பயன்பாடு குறித்து லுகானிஸ்மான் கவலை தெரிவித்தார், ஏனெனில் அவை மிகவும் கவர்ச்சிகரமானவை, எளிதில் கிடைக்கின்றன. அதன் பயன்பாட்டினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து சுகாதார அமைச்சு தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக, மின்சிகரெட்டுகளிலிருந்து ஏற்படும் EVALI போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளன. இரண்டு வார சிகிச்சைக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரிங்கிட் செலவாகும், இது சுமையாக இருக்கும். புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களான புற்றுநோய் போன்ற சுகாதார பரிசோதனைகளுக்கு கிட்டத்தட்ட 200 மில்லியன் ரிங்கிட் செலவிடுகிறோம். இந்த 200 மில்லியன் ரிங்கிட் சேமிப்பை மற்ற திட்டங்களுக்கு மாற்றினால், அதிக ஆரோக்கிய மையங்களையும், பழுதடைந்த கிளினிக்குகளையும் மீண்டும் கட்டலாம் என்று அவர் கூறினார்.