ஜார்ஜ்டவுன், பிப்.10
சதுர்த்தி திதியும், பூசம் நட்சத்திரமும் கூடிய நன்னாளான தைப்பூச திருநாளையொட்டி, பினாங்கு தைப்பூச விழா களைக்கட்டியது.
முருகனின் திருவருளையும், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனுமான கந்தப்பெருமானின் கீர்த்தியையும் தாங்கிய தங்க ரதம், பினாங்கு குயின் ஸ்திரீட்டில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து இன்று காலை 6.00 மணிக்கு தண்ணீர் மலை, அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி புறப்பட்டது.
முருகப்பெருமான் தங்க ரதத்தில் எழுந்தருளி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், இரத ஊர்வலம் மேளதாள, நாதஸ்வர இசை முழங்க பக்தர்கள் புடை சூழ, தண்ணீர் மலையை நோக்கி புறப்பட்டார்.
ஆலயத் தலைவர் டத்தோஸ்ரீ குமரேந்திரன், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் R.A.லிங்கேஸ்வரன், ஆணையர்களான டத்தோ J. தினகரன், குமரன் கிருஷ்ணன் உட்பட இதர ஆணையர்கள் உடன் செல்ல, முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்த வண்ணம் சென்றார்.
பக்தர்கள் பால் குடம் ஏந்திய வண்ணம், தங்க இரதத்துடன் செல்ல, முருகப்பெருமானின் உற்சவத்தை சிறக்க வைக்க, கோலாட்டம், மயிலாட்டம், உரிமை மேளம் என பன்னிசை அருள்மிகுந்த காட்சி பரவசத்தில் ஆழ்த்தியது.
தங்க இரதம், தண்ணீர் மலையை நோக்கி , தங்கு தடையின்றி சீராக பயணிக்க அரச மலேசிய போலீஸ் படையனர் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
முருகனின் திருவருளை பெறுவதற்கு வழிநெடுகிலும் பக்தர்கள், கந்தனின் வருகைக்காக காத்திருந்த காட்சி, பினாங்கின் தைப்பூச விழாவிற்கு மெருகேற்றியது.
பினாங்கு, தைப்பூச விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சீனப் பக்தர்களின் நேர்த்திக் கடன் செலுத்தும் காட்சி, இம்முறையும் குறையவில்லை.
தங்க ரதம், பக்தர்களுக்கு காட்சி அளித்த வண்ணம், இரவுக்குள் தண்ணீர் மலையைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.