அம்பாங், பிப்.13
துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களைத் தன் வசம் வைத்திருந்த வணிகருக்கான தடுப்புக்காவல், மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா, மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
34 வயதுடைய அந்த வணிகரின் தடுப்புக்காவல், வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னதாக விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தயாரிக்கப்பட்டதும் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் சனிக்கிழமை பிற்பகலில் தம்முடன் தகராற்றில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர், துப்பாக்கி வைத்திருந்ததைத் தாம் பார்த்ததாக பிலிப்பைன்ஸ் பிரஜை ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 34 வயதுடைய அந்த நபரை போலீசார் வளைத்துப் பிடித்ததாக உதவி கமிஷனர் முகமட் அஸாம் தெரிவித்தார்.