ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு

பெங்களூரு, பிப்.14-

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து வாங்கி குவித்ததாக வழக்கு பதிவுசெய்தனர். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீபா மற்றும் தீபக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவின் நகைகள், சொத்துகள் ஆகியவை தமிழ்நாடு அரசுக்கே சொந்தமானவை என்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றமும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துகளின் சீல் அகற்றப்பட்டது. கர்நாடகா நீதிமன்ற கருவூலத்தில் உள்ள சொத்துகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. அதனை ஜெயலலிதாவின் தங்கம், வைர நகைகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 

WATCH OUR LATEST NEWS