முஸ்லிம் அல்லாதவர்கள் சமய விவகாரங்களை கையாளுவதற்கு தனி அமைச்சர் பதவியா? அமைச்சரவைக்கு உடன்பாடுயில்லை என்கிறார் பிரதமர்

சுபாங் ஜெயா, பிப்.14-

முஸ்லிம் அல்லாதவர்களின் சமய விவகாரங்களைக் கையாளுவதற்கு பிரத்தியேகமாக ஓர் அமைச்சர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று டிஏபி எம்.பி. ஒருவர் முன்வைத்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்காக ஓர் அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டும் என டிஏபியைச் சேர்ந்த ரவுப் எம். பி. சொவ் யூ ஹுய் முன்மொழிந்த பரிந்துரையானது, அவரின் தனிப்பட்ட கருத்தாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அந்த எம்.பி.யின் பரிந்துரைக்கு யாரும் உடன்படவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

இதனிடைய முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களை கையாளுவதற்கும், அவற்றை நிர்வகிப்பதற்கும் ஒரு சிறப்பு இலாகாவை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிகேஆர் சிகமாட் எம்.பி. ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல இன மலேசியர்களிடையே பதற்றத்தைத் தவிர்க்க, முஸ்லிம் அல்லாத மதப் பிரச்சினைகளைத் தீர்க்க சிறப்பு இலாகாவை உருவாக்குவது பெரும் உதவியாக இருக்கும் என்று யுனேஸ்வரன் கூறினார்.

“முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களை நிர்வகிக்க அமைச்சரவையில் சிறப்பு இலாகா தேவையில்லை என்று கூறுகின்றவர்களின் வாதத்தில் தமக்கு உடன்படவில்லை. என்றும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தாம் விவாதித்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தேசிய ஒற்றுமை என்பது பெரும்பாலும் ஒரு விவகாரமாக மாறியுள்ளது, அதற்கான காரணங்களில் ஒன்று மதம். தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்காக மதத்தைப் பயன்படுத்தும் கட்சிகள் இருப்பதாக யுனேஸ்வரன் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS