தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், ரசிகர்களால் செல்லமாக ராக்ஸ்டார் என அழைக்கப்படுவர் அனிருத். இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதிலும் ஒய் திஸ் கொலை வெறி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது.
3 படத்தின் மூலம் புகழ் பெற்ற இந்த கூட்டணி வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் படங்களில் தொடர்ந்து பணியாற்றினர். மேலும், தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல், காக்கி சட்டை, நானும் ரவுடிதான் படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். குறிப்பாக தனுஷ் – அனிருத் கூட்டணி என்றாலே இசையுலகில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மீண்டும் எப்போது இணைவார்கள் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
தனுஷ் – அனிருத்திற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் 2015 முதல் 2022 வரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் 7 ஆண்டுகள் கழித்து தனுஷ் – அனிருத் மீண்டும் இணைந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா, தேன்மொழி, தாய் கிழவி பாடல்கள் பெரியளவில் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் தனுஷ் நடிக்கும் 56ஆவது படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் 2ஆவது படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அனிருத் இசையமப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷ் – அனிருத் இணைவதால் படத்தின் பாடல்களும், படமும் 100% ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.